கருப்பையை கொடுத்து உடலினை கிழித்து
வலியினை பொறுத்து பெற்றாயே
உயிரினை கொடுத்து உணவினை விடுத்து
காத்து உச்சி முகர்ந்தாயே தாயே
உச்சி முகர்கையில் வீலென்ற சத்தம்
புல்லாங்குழலும் தோற்றிடுமே
கடைசியில் வரையில் இனித்திடும் பந்தம்
விரலை பிடித்து நடந்திடுமே
விரலை பிடித்து அழைத்திடும் பெண்மை
இன்னும் சில இங்கே தாயாகிடும்
அக்காளின் கையே தன் கையாய்
தன் கையே தங்கை என்றாகிடும்
தன் கையுடன் இன்னொரு கை சேர்ந்திடுவாள்
அந்நாள் இல்லாள் என்றாகிடுவாள்
முன்நாள் அவளாய் இருந்திருப்பாள்
பின்நாள் வரை துணையாய் வாழ்ந்திடுவாள்
துணையாய் அன்பை அழைத்திடுவாள்
சுய பொதுநலனை ஒன்றாக்கிடுவாள்
பிறர் தொழ புனித பெண்ணாகிடுவாள்
அடக்கமாய் அதெல்லாம் வேண்டாம் என்பாள்
அடக்கமாய் இருந்திட அவள் வாழ்ந்திடுவாள்
அமைதியாய் வாழ்ந்திட வழி செய்திடுவாள்
புது அவதாரம் எடுக்கையில் போரிடுவாள்
அவள் மனமே என்றும் போரிடும் வாள்
மனத் திடமும் உடலும் ஒன்றாகிடுவாள்
தோள் வலிமையை ஆண்களுக்கு நிகராக்கிடுவாள்
உலகமே வெற்றியை எதிர் பார்க்கையிலே
ஓர் அடியில் தன்னை காட்டிடுவாள்
அடி மேல் அடிகளை அடித்தாலும்
அடக்கத்தை அங்கே விதைதிடுவாள்
பாரத படிகளை உடைக்கையிலே
உயிரினை தந்தும் காத்திடுவாள்
உயிரினை உடலுக்கு தாராமல்
நாட்டுக்கு தந்தே வாழ்கின்றாள்
வார்த்தையை வீணாய் தாராமல்
பிறர் வாழ்க்கைக்கு தந்தே வாழ்கின்றாள்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்று பிறர் வாழ கற்று தருகின்றாள்
பிறர் பிள்ளையை தன்னுடையதாய் எண்ணிடவே
அங்கும் தாயாய் வாழ்கின்றாள்
தாயாய் வாழும் அக்குணம் ஒன்றே
பெண்மை என்று ஆகாது - பிறர்க்காக
தீயாய் மாறும் குணங்கள் கூட
பெண்மைக்குள் இருக்கும் தெரியாது
மெதுவாய் ஓடும் நீருக்குள்ளே
அருவியாய் வீழும் தெம்பிருக்கும்
அமைதியாய் இருக்கும் வில்லுடன்தான்
வேகமாய் பாயும் அம்பிருக்கும்
No comments:
Post a Comment