பிறந்தது முதல் எதாவது ஒரு வேலையை செய்து வாழ்ந்துக்கொண்டு மரணத்தில் முடிவதுதான் நம் வாழ்க்கை. ஆனால் 24ஆம் வயதில் இருந்து 10 வருடங்களாக தினம் தினம் மரணத்தை எதிர் நோக்கி இருக்கிறார் மயூரன் சுகுமாரன். இவர் லண்டனில் பிறந்து இலங்கையில் கொஞ்ச நாளும் பின் ஆஸ்திரிலேயாவிலும் வளர்ந்த தமிழன். 2005 ஏப்ரல் 17ஆம் தேதி இந்தோனிஷியா போலிசாரால் கைது செய்யப்பட்டார். அன்றுதான் அவரின் பிறந்த நாள் . இவருடன் சேர்த்து 9 பேர் கைதான இவ்வழக்கிற்கு போலீசார் வைத்த பெயர் "பாலி 9". அவர் கைது செய்யப்பட்டது போதை வழக்கில். கடுமையான சட்டதிட்டங்கள் கொண்ட இந்தோனிஷியாவில் எதிர்ப்பார்த்தபடி கைதான அடுத்த வருடமே மரண தண்டனை விதிக்கப்பட்டது இரண்டு பேருக்கு. இரண்டாவது ஆள் மயூரனின் நண்பர் ஆண்டர் சான். இவர்களை முதன்மை குற்றவாளிகள் என நினைத்த நீதிமன்றம் சுட்டுக்கொல்ல உத்திரவிட்டது.
வழக்கம்போல கருணை மனுவை மட்டுமே நம்பி இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையில் சேர்ந்த மயூரன் மனமுடைந்து இருப்பார் என்றே அனைவரும் நினைத்தனர். அனால் நடந்தது வேறு. வாழும் சில நாட்களை மற்றவர்களுக்காக வாழ நினைத்தார். நன்றாக ஓவியம் வரையும் திறன் கொண்ட அவர் டீசர்ட் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு டிசைன்களை வரைந்து கொடுக்கும் வேலையையும், தான் வரையும் படங்களை விற்றும் அதிக வருமானம் ஈட்டி அதை பலரின் போதை பழக்கத்தில் இருந்து மீண்டவர்களின் மறுவாழ்விற்க்கு தந்து உதவி செய்து வந்துள்ளார். தண்டனை பெற்ற இளம் கைதிகளின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நூலகம். கணினி ஆகியவற்றை ஏற்பாடு செய்ததோடுநில்லாமல் கைதிகளுக்கு கணினி சம்பந்தமான பாடங்களையும் கற்று தந்துள்ளார்.
2011 ஜூலையில் மேல்முறையீடும் 2014 டிசம்பர் 30 அன்று சுகுமாரனின் பொதுமன்னிப்புக்கான விண்ணப்பமும் தள்ளுபடி செய்யப்பட்டதும் நுசகம்பான்கன் தீவில் உள்ள சிறைச்சாலைக்கு 2015 சனவரியில் இடம் மாற்றப்பட்டார்கள்.
"நான் கைதுசெய்யப்படும் வரை, யாருக்கும் நான் எந்த ஒரு சிறு உதவியும் செய்தது இல்லை. மிக மிக சுயநலமாக என்னைப் பற்றி மட்டுமே யோசிக்கக்கூடிய ஒரு மனிதனாக இருந்தேன். வாழ்க்கையின் தேவைகள் என்ன, நோக்கங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளாமல் ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டேன்.
ஆனால், இந்தச் சிறை வாழ்க்கை, எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்து விட்டது. இப்போது நான் மனிதர்களைப் பற்றி நிறையவே யோசிக்கிறேன். அவர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ, அதை மட்டும் செய்கிறேன்.
இப்போது நான் வாழ ஆசைப்படுகிறேன். ஏனென்றால், நான் கைதுசெய்யப்பட்டதில் இருந்து இந்த நிமிடம் வரையிலான என் வாழ்வை நான் அர்த்தம் உள்ளதாக மாற்றியிருக்கிறேன்.
எனக்குத் தெரியாத பல விஷயங்களை வாழ்க்கை இப்போது கற்றுக் கொடுத்திருக்கிறது. அவுஸ்திரேலியா மக்களிடமும் இந்தோனேஷியா மக்களிடமும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் அனைவரிடமும் நான் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன் " என்பதே மயூரன் நுசகம்பான்கன் தீவில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றும்முன் கடைசியாக உலகத்துக்குச் சொன்ன செய்தி.
நுசகம்பான்கன் சிறைக்கு மாற்றிய 72 மணி நேரத்தில் தண்டனை நிறைவேற்றிவிடுவது வழக்கம். ஆனால் இன்னும் நிறைவேற்றாதது எந்த சமயத்திலும் தள்ளுபடி ஆகலாம் என்ற நிலையானாலும் தள்ளுபடி என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள் ஆறு பேரின் கையெழுத்து இட்டு அனுப்பிய பிறகும் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது நாம் கவனிக்க வேண்டியது.
"எங்கள் இறையாண்மையை மீறி செயல்பட முடியாது " இது இந்தோனிஷிய அதிபர் கூற்று.
"'எனக்கு அவன் ஒரு நல்ல சகோதரனாக இருந்தான். அவனை நோக்கி வீசப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வியாகவே இருந்தது.
இன்று ஆஸ்திரேலியா அரசு எவ்வளவோ முயன்றும், என் அண்ணன் இன்னும் மரணத்தின் பிடியில் இருந்து விலகவில்லை. அவன் எங்கேயாவது ஓர் இடத்தில் உயிரோடு இருந்தால் கூடப் போதும். ஆனால், அது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.
மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாட்டில் (ஆஸ்திரேலியா) இருந்து மரண தண்டனை விதிக்கப்படும் அந்நிய நாட்டின் சட்டப் பிடியில் இருந்து என் சகோதரனை மீட்கும் வழி தெரியாமல் தவிக்கிறோம். அவனைச் சுட்டுக் கொல்லும் நாளில் மரணிக்கப் போவது மயூரன் மட்டும் அல்ல... நான், அப்பா அம்மா , தம்பி என எங்கள் அனைவரின் மனசாட்சியும்தான்.
அன்று நாங்கள் அனைவருமே துயரமான ஒரு வாழ்க்கையினுள் விழப் போகிறோம். இப்போதே நாங்கள் தனித்து வாழ்கிறோம். எங்கள் வீட்டில் நல்ல சாப்பாடு சாப்பிட்டே பல நாட்கள் ஆகின்றன.
அந்தக் கறுப்பு நாளுக்குப் பிறகு எங்கள் நிலை என்னவாக இருக்கும் எனக் கற்பனைகூட செய்ய முடியவில்லை" என்று கதறும் அவரின் சகோதரிக்கு யாரால்தான் ஆறுதல் சொல்ல முடியும்?
யார் என்ன சொன்னாலும் தன் பிள்ளையை மீட்டுத்தாருங்கள் என கதற அங்கேயும் ஒரு அற்புதம்மாள் இருக்கதான் செய்கிறாள்.
"அவன் கைது செய்யப்பட்ட தினத்தில் இருந்து இன்று வரை எங்கள் குடும்பத்தில் யாராலும் அதை நம்ப முடியவில்லை. இப்போது அவனுக்கு இறுதித் தண்டனை வந்த பிறகு, அவனது வளர்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா எனச் சிலர் கேட்கிறார்கள்.
ஒரு தாய் தன் மகனை எப்படியெல்லாம் அன்பாக வளர்ப்பாளோ, அப்படித்தான் நான் அவனை வளர்த்தேன். அவனை மட்டும் அல்ல மூன்று குழந்தைகளையுமே. இடையில் அவன் திசைமாறிப் போயிருக்கலாம். நண்பர்கள் தவறாக வழிகாட்டியிருக்கலாம். ஆனால், இப்போது அது பற்றி பேசுவதோ, ஆராய்வதோ பலரையும் காயப்படுத்தும்.
நான் அவுஸ்திரேலிய மக்களிடமும் அரசிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். அவனை மன்னித்து, கருணை காட்டும்படி கேட்கிறேன். ஒரு தாயாக நான் இதை மட்டுமே செய்ய முடியும். எனக்கு என் மகன் வேண்டும்!
நாங்கள் அவனை விடுவிக்க இந்தோனேஷியா நீதிமன்றத்தில் போராடினோம். அவுஸ்திரேலியா வழக்குரைஞர்களின் உதவியோடு இந்தோனேஷியா வழக்குரைஞர்கள் இயன்றவரை வாதாடிப் பார்த்தனர். எந்தப் பலனும் இல்லை
நான் தேவாலயம் போய் என் மகனுக்காகப் பிரார்த்திக்கிறேன். சிறைக்குப் போய் அவனைச் சந்திக்கிறேன். இதுதான் என் வாழ்க்கை என்றாகிவிட்டது. அவனை முதலில் வைத்திருந்த பாலி சிறை பற்றி வாசித்த போது, அது மிக மோசமான கெட்ட கனவாக இருந்தது. அவனை நேரில் பார்த்தபோது, என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை.
குமுறிக் குமுறி அழுதேன், அவன் என்னைத் தேற்றினான். அதன் பின்னரும் நான் சில முறை அவனைச் சந்தித்தேன். ஆனால் ஒருபோதும் அவனிடம், 'நீ இதைச் செய்தாயா? எனக் கேட்டது இல்லை, கேட்கவும் விரும்பவில்லை.
இந்த உலகம் அவனைக் குற்றவாளி என்கிறது. அவன் செய்தது பயங்கரமான குற்றம் என்கிறது. ஆனால், அவன் என் மகன்... அவ்வளவுதான். நான் போனால், என்னிடம் தன் அவுஸ்திரேலிய நண்பர்கள் பற்றி விசாரிக்கிறான்
தன்னைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு வீடு பற்றி, தெரு பற்றி, தேவாலயம் பற்றி தகவல் கேட்கிறான். தங்கையிடமும் தம்பியிடமும் படிப்பு பற்றி பேசுகிறான். யோகா செய்யுமாறு சொல்கிறான்.
நாங்கள் ஏன் அவனுக்காக இவ்வளவு போராடுகிறோம் என்றால், தன் வாழ்வில் இழைத்த ஒரு தவறுக்குப் பிராயச்சித்தமாக, சிறையில் மயூரன் சிறந்த மனிதனாக கடந்த 10 ஆண்டுகளாக வாழ்கிறான். தன்னால் முடிந்த உதவிகள் அனைத்தையும் பிறருக்குச் செய்கிறான்.இதனால்தான் இன்னொரு முறை அவனுக்கு வாழும் வாய்ப்பை வழங்கக் கேட்கிறேன்" இவ்வாறு
.மண்டியிடும் தாயின் கண்ணீருக்காவது ரத்தாகுமா தண்டனை. பிள்ளைக்கு மரணம் என்றால் எந்த தாய்தான் தாங்குவாள்?.
ஏறக்குறைய அந்த நாள் நெருங்கி விட்டது.
ஆம் இன்னும் 72 மணி நேரத்தில் தண்டனை என சனிக்கிழமை (25/4/2015) அறிவிப்பு வெளியிடப்பட்டபடி இன்று நள்ளிரவு மரணதண்டனை நிறைவேற்ற காத்திருக்கின்றனர்.
ஆண்டர் சான் தனது காதலியை நேற்று சிறையில் மணந்து நண்பன் மயூரனுடன் மரணத்தை பகிர காத்திருக்கின்றார்.
கடைசியாக ஒரு ஓவியம் வரைய ஆசைப்பட்ட மயூரனின் ஆசையை நிறைவேற்றிய இந்தோனிஷிய போலிசுக்கு தெரியாது அதில் அவ்வளவு உணர்வுகள் தெளிக்கப்பட்டிருக்கும் என்று .
துப்பாக்கியும் தயார்
கைதிக்கு ஆடையும் தயார்
29.4.15 தேதியிட்ட சவப்பெட்டியும் தயார்
மன்னிப்பு மட்டும் காத்திருப்பில்.
(சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது )
-மதன் ஹிமாத்ரி
No comments:
Post a Comment