Wednesday, 27 September 2017

அவள் அழகி





நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வருடா வருடம் 30 பேர் வீதம் தேர்ந்தெடுத்து இண்டர்ன்ஷிப் வாய்ப்பு அளிப்பதுண்டு.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் அனைவரும் பூனேயில் உள்ள பெரிய பெரிய பல்கலைக்கழகங்களில் இருந்து B.Tech, MCA, M.Tech பிரிவுகளில் 85% மேல் எடுத்த மாணவ-மாணவிகள்தான்.
6 மாத கால இண்டர்ன்ஷிப் முடிந்ததும் பெரும்பாலும் எங்கள் நிறுவனம் அவர்களை பணியில் அமர்த்திக்கொள்ளும்.
இண்டர்ன்ஷிப்க்கு தேர்ந்தெடுக்கும்போது 6-7 சுற்றுகள் கடந்து வந்திருப்பதால் பணியில் அமர்த்தும்போது நிறுவனத்தின் சார்பில் பெரிய நேர்காணல் இருக்காது.
"
எங்கள் நிறுவனம் உங்களை பணியமர்த்த விருப்பப்படுகின்றது உங்களுக்கு விருப்பம் இருந்தால் அடுத்த வாரம் முதல் எங்கள் நிறுவன ஊழியராக இணைந்துக்கொள்ளலாம்" என்று ஒரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பப்படும்.
சில முறை மாணவர்கள் இந்த வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு கூகுள் போன்ற மிகப் பெரிய கனவு நிறுவனத்திற்கு போவதுண்டு.
அந்த மாணவர்களின் திறமை எல்லாம் அபாரமாக இருக்கும். மதிப்பெண்ணுக்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும் நம் கல்லூரி பாடத்திட்டத்திற்கு முற்றிலும் வேறுப்பட்டது.
சென்ற வருடம் வந்த 30 பேர்களில் அவளும் ஒருத்தி.
அவளுடைய பெயரின் முதல் பாதி நமக்கு புரியும்படியான லக்‌ஷ்மிகரமான பெயர். பின்பாதி வாயில் நுழையவில்லை.
என்னுடைய இருக்கைக்கு செல்லும் முன் அவளது இடம் என்பதால் அடிக்கடி கண்ணில் படுவாள். 
பார்க்கும்போதெல்லாம் "ஹாய்" சொல்லிவிட்டு புன்னகையை இலவசமாக வழங்குவாள்.
அழகான முகம். அதனிலும் மேலான அவளது லிப்ஸ்டிக், கண் மை, கொத்தாக நெற்றியில் பாதிவரை வெட்டிய முன்னால் இருக்கும் முடி ஆகியவை அவளின் அழகுக்கு மேலும் அலங்காரம்தான்.
அவளின் மேக்கப் பற்றி எதுவும் குறையாக சொல்ல வரவில்லை. காலை 10 மணிக்குமானாலும் மதியம் 1 மணியானாலும் சாயங்காலம் 5 மணியானாலும் அவளது முகத்தின் சாயப்பூச்சுக்கள் குறையவே குறையாது இருப்பதுதான் ஆச்சர்யம். அவளது முகத்தினைப்போல ஆடைகளும் அவ்வளவு நேர்த்தியாக உடுத்தியிருப்பாள்.
அவளும் 6 மாதங்களின் முடிவில் நிறுவனத்தால் பணியமர வைக்கப்பட்டாள். அடிக்கடி சில சந்தேகங்கள் வந்தால் எங்கள் டீம்மிடம் வந்து கேட்பாள். எந்தவொரு பதட்டமோ பரபரப்போ அழகு என்பதன் திமிரோ இருக்காது.
ஒருநாள் நான் என்னுடன் வேலை செய்யும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
அவன் பூனேவை பூர்வீகமாகக் கொண்டவன். சில மாதங்களுக்கு முன்பு திருமணமானவன்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவள் எங்களை நோக்கி வந்துக்கொண்டிந்தாள். அதே மணம் அதே மேக்கப் அதே சிரிப்பு அதே "ஹாய்".
அவள் கடந்தப்பின்பு அவன் கேட்டான்
"
நல்லா இருக்காளா?"
"
நல்லாதானே இருக்கா" நான் சொன்னேன்.
"அவ கூட பேசுவியா"
"
பேச மாட்டேன். சும்மா ஹாய் மட்டும்"
.
.
.
நீண்ட அமைதி.
நானே அமைதியை உடைத்தேன்.
"
நீ பேசுவியா?"
"
ச்ச ச்ச.. அவள பாக்கவே மாட்டேன்" ஏளனமாக சொன்னான்.
"ஏன் உனக்கு கல்யாணம் ஆனதாலவா?"
"இல்லை இல்லை" சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டான்.
ஒருவேளை முன்பே பழக்கமானர்களோ , எதாவது சண்டையாக இருக்குமோ என்றெல்லாம் என் மனம் யோசித்துக்கொண்டிருந்தது.
அவனிடமே கேட்டுவிட நினைத்து
"
ஏன்" என்றேன்.
"
என்ன ஏன்" புரியாதபடி கேட்டான்.
"
ஏன் அவளுடன் பேச மாட்ட முன்னாடியே தெரியுமா? எதாவது பிரச்சனையா? "
"
இல்ல வேற ஒரு காரணம்"
"
என்ன காரணம்"
"
அவ வேற ஆளு"
"
இன்னொருத்தனுடைய ஆள் என்பதால் பேச மாட்டியா?" ஆச்சர்யமாக கேட்டேன்.
"இன்னொருவனின் ஆள் இல்லை.
வேறு ஒரு சாதியில் ஒரு ஆள்"
அவன் சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
"வேறுசாதியாக இருந்தால் பேச மாட்டியா?"
இப்படியும் இன்னும் சிலர் இருக்கின்றார்களா என்ற அதிர்ச்சிதான்.
"அவள் தாழ்த்தப்பட்ட சாதிக்காரி" மேலும் ஒரு குண்டைப் போட்டான்.
"அந்த பெண் உங்கள் ஊரா?" அதே அதிர்ச்சியுடன் கேட்டேன்.
"இல்லை இல்லை. இங்குதான் முதல்முறை பார்க்கின்றேன் " என்றான்.
"அப்புறம் எப்படி அவள் வேறு சாதி என்று சொல்கின்றாய்?"
"அவள் இருக்கையில் பார்த்தேன்" என்றான் சாதாரணமாக.
"நான் இந்த சாதி என்று திமிராக எழுதி வைத்துள்ளாளா?" கோபத்துடன் கேட்டேன்.
"இல்லை. அவளோட பெயரில் அவ்வளவு தெளிவாக இருக்கே. அவளின் பெயரின் பின்பாதி அவளின் சாதிப் பெயர். நாங்கள் ஒருப்போதும் தீண்டாத ஒரு கேவலமான சாதி. அவளைப்பார்த்து பேசினால் ஒரு மாதிரி இருக்கும். அவளே வந்து எதாவது கேட்டால் எதாவது சொல்லி தள்ளிவிடுவேன்"
எனக்கு பேச்சே வரவில்லை. பெயரின் கடைசிப்பகுதியில் சாதி பின்னோக்கி வருவதன் கொடுமை இன்னும் இந்த நாட்டில் இருப்பது இத்தகைய கொடுமை என்று புரிய சிறிது நேரம் எடுத்துக்கொண்டு என்னிருக்கைக்கு வந்துவிட்டேன். வேலை செய்ய மனமே இல்லை. என் இருக்கையில் எழுதியிருக்கும் என் பெயரினையும் என் பெயரின் கடைசியில் உள்ள என் தந்தையின் பெயரையும் பார்த்துவிட்டு ஒரு பெருமை கலந்த பெருமூச்சிவிட்டேன். 


#நன்றி_பெரியார்


குறிப்பு: பெயரில் சாதி ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் இவ்வளவு  கஷ்டப்பட்டு படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு நிலைக்கு வந்து நன்றாக சம்பாதிக்கும் சூழ்நிலை வந்தப் பின்னரும் ஒருவரின்  சாதியைவைத்து   கீழ்த்தரமாகவே இந்தஉலகம் பார்க்கும்போது அவர்களின் பொருளாதாரத்தையும்  தாண்டி வாழ்க்கையில் அவர்களுக்கு சம உரிமை வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ. எத்தனை பெரியார்கள் வேண்டுமோ. 

மறுபடியும் அவளைப் பார்க்கும்போது அவளது சிரிப்பில் சாதி தெரியவில்லை உடையில் சாதி தெரியவில்லை முகப்பூச்சில் சாதி தெரியவில்லை முக்கியமாக அவளது அழகில் சாதி தெரியவில்லை. இன்னும் அவள் அழகு கூடியேயிருந்தது.

ஆம்.
அவள் எதிலும் தாழ்ந்தவள் அல்ல. அவள் அழகானவள்.



Saturday, 25 February 2017

சத்குரு - நமோ - அயோகி

            

                 எல்லா பிரச்சனைகளையும் விட்டுவிட்டு பார்த்தால் சத்குரு போன்ற ஆட்கள் நம் சமுதாயத்திற்கு தேவை. அவருடைய கருத்துக்களும் யோகா மீதான பார்வையும் கண்டிப்பாக நம் நாட்டின் இளைய சமுதாயத்திற்கும் தேவைதான். நமோவிற்க்காக அவரை ஆதரிப்பதும் நமோ ஆதரிக்கிறார் என்பதால் ஒரு பிரிவினர் எதிர்ப்பதும் தேவை இல்லாதது. காட்டை அழிக்கும்போது அமைதியாக இருந்தோம். நமோ வரும்போதுதான் நமக்கு காடு எரியும் வாசம் தெரிகின்றது. சென்ற வருடம் இதே நாள் இதே ஆதரவாளர்கள் அவ்வளவு ஆரவாரம் செய்யவில்லை. அப்போது இவ்வளவு எதிர்ப்பு இல்லை. அப்போது "ஆதியோகி" "அயோகி" ஆகவில்லை. கண்மூடித்தனமான ஆதரவும் எதிர்ப்பும் நமக்கும் நம் சமுதாயத்திற்கும் நல்லதல்ல என்பதை எப்போது புரிந்துகொள்கின்றோமோ அப்போதுதான் வெறுப்பு விருப்பு இல்லாத உலகம் அமையும். இதையே தான் இந்துத்துவாவும் கிருத்துவமும் இஸ்லாமும் சொல்கின்றது...


"மதங்களை அழித்துவிட்டால் நாடும் உலகமும் நன்றாக இருக்கும்" என்று எனக்கு தோன்றவில்லை. மனிதனை நல்வழி படுத்தும் இந்த மதங்கள் தேவைதான். சாதிகள் தான் வேண்டாம். எந்த மதமாக இருந்தாலும் மற்றவர்களை புண்படுத்த சொல்லித்தருவதில்லை. இப்போது உலகில் நடக்கும் மதரீதியான பிரச்சனைகளுக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான் தன் மதக்கருத்தை ஒழுங்காக படிக்காமல் மற்றவரின் மதத்தினை அசிங்கப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவதே அது. இது மனிதமே இல்லை. மனிதத்தை சொல்லித்தராத மதம் என்று ஒன்றுமில்லை. மனிதத்தை சொல்லித்தரவில்லை என்றால் அது மதமே இல்லை அதற்கு பெயர் தீவிரவாதம். மனதை கொன்றாலும் மனிதனை கொன்றாலும் எல்லாம் தீவிரவாதம்தான். எந்தமதத்தின் கருத்தையும் பின்பற்றுவோம் மனிதத்தை காப்போம். 

💓💝அன்பே சிவம்💝💓    3

Tuesday, 2 August 2016

எங்கும் பெண் எதிலும் பெண் யாவும் பெண்

கருப்பையை கொடுத்து உடலினை கிழித்து
வலியினை பொறுத்து பெற்றாயே  
உயிரினை கொடுத்து உணவினை விடுத்து
காத்து உச்சி முகர்ந்தாயே தாயே
                                                                         
உச்சி முகர்கையில் வீலென்ற சத்தம்
புல்லாங்குழலும் தோற்றிடுமே
கடைசியில் வரையில் இனித்திடும் பந்தம்
விரலை பிடித்து நடந்திடுமே

விரலை பிடித்து அழைத்திடும் பெண்மை
இன்னும் சில இங்கே தாயாகிடும் 
அக்காளின் கையே தன் கையாய்
தன் கையே தங்கை என்றாகிடும்

தன் கையுடன் இன்னொரு கை சேர்ந்திடுவாள் 
அந்நாள் இல்லாள் என்றாகிடுவாள்
முன்நாள் அவளாய்  இருந்திருப்பாள்
பின்நாள் வரை துணையாய்  வாழ்ந்திடுவாள்


துணையாய் அன்பை  அழைத்திடுவாள்
சுய பொதுநலனை ஒன்றாக்கிடுவாள்
பிறர் தொழ புனித பெண்ணாகிடுவாள்
அடக்கமாய் அதெல்லாம் வேண்டாம் என்பாள்

அடக்கமாய் இருந்திட அவள் வாழ்ந்திடுவாள்
அமைதியாய் வாழ்ந்திட வழி செய்திடுவாள்
புது அவதாரம் எடுக்கையில் போரிடுவாள்
அவள் மனமே என்றும்  போரிடும் வாள்


மனத் திடமும் உடலும் ஒன்றாகிடுவாள்
தோள் வலிமையை ஆண்களுக்கு நிகராக்கிடுவாள்
உலகமே வெற்றியை எதிர்  பார்க்கையிலே
ஓர் அடியில் தன்னை காட்டிடுவாள்


அடி மேல் அடிகளை அடித்தாலும்
அடக்கத்தை அங்கே விதைதிடுவாள்
பாரத படிகளை உடைக்கையிலே
உயிரினை தந்தும் காத்திடுவாள்  




உயிரினை உடலுக்கு தாராமல்
நாட்டுக்கு தந்தே வாழ்கின்றாள்
வார்த்தையை வீணாய் தாராமல்
பிறர் வாழ்க்கைக்கு தந்தே வாழ்கின்றாள்   

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்று பிறர் வாழ கற்று தருகின்றாள்
பிறர் பிள்ளையை  தன்னுடையதாய் எண்ணிடவே
அங்கும் தாயாய் வாழ்கின்றாள்

தாயாய் வாழும் அக்குணம் ஒன்றே
பெண்மை என்று ஆகாது - பிறர்க்காக
தீயாய் மாறும் குணங்கள் கூட
பெண்மைக்குள் இருக்கும் தெரியாது

மெதுவாய் ஓடும் நீருக்குள்ளே
அருவியாய் வீழும் தெம்பிருக்கும்
அமைதியாய் இருக்கும் வில்லுடன்தான்
வேகமாய் பாயும் அம்பிருக்கும்

Friday, 8 May 2015

மரணத்தை நோக்கிய மனதின் கதை: ( என் மனதை பாதித்த ஒரு சம்பவம்)


பிறந்தது முதல் எதாவது ஒரு வேலையை செய்து வாழ்ந்துக்கொண்டு மரணத்தில் முடிவதுதான் நம் வாழ்க்கை. ஆனால் 24ஆம் வயதில் இருந்து 10 வருடங்களாக தினம் தினம் மரணத்தை எதிர் நோக்கி இருக்கிறார் மயூரன் சுகுமாரன். இவர் லண்டனில் பிறந்து இலங்கையில் கொஞ்ச நாளும் பின் ஆஸ்திரிலேயாவிலும் வளர்ந்த தமிழன். 2005 ஏப்ரல் 17ஆம் தேதி இந்தோனிஷியா போலிசாரால் கைது செய்யப்பட்டார். அன்றுதான் அவரின் பிறந்த நாள் . இவருடன் சேர்த்து 9 பேர் கைதான இவ்வழக்கிற்கு போலீசார் வைத்த பெயர் "பாலி 9". அவர் கைது செய்யப்பட்டது போதை வழக்கில். கடுமையான சட்டதிட்டங்கள் கொண்ட இந்தோனிஷியாவில் எதிர்ப்பார்த்தபடி கைதான அடுத்த வருடமே மரண தண்டனை விதிக்கப்பட்டது இரண்டு பேருக்கு. இரண்டாவது ஆள் மயூரனின் நண்பர் ஆண்டர் சான். இவர்களை முதன்மை குற்றவாளிகள் என நினைத்த நீதிமன்றம் சுட்டுக்கொல்ல உத்திரவிட்டது.

வழக்கம்போல கருணை மனுவை மட்டுமே நம்பி இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையில் சேர்ந்த மயூரன் மனமுடைந்து இருப்பார் என்றே அனைவரும் நினைத்தனர். அனால் நடந்தது வேறு. வாழும் சில நாட்களை மற்றவர்களுக்காக வாழ நினைத்தார். நன்றாக ஓவியம் வரையும் திறன் கொண்ட அவர் டீசர்ட் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு டிசைன்களை வரைந்து கொடுக்கும் வேலையையும், தான் வரையும் படங்களை விற்றும் அதிக வருமானம் ஈட்டி அதை பலரின் போதை பழக்கத்தில் இருந்து மீண்டவர்களின் மறுவாழ்விற்க்கு தந்து உதவி செய்து வந்துள்ளார். தண்டனை பெற்ற இளம் கைதிகளின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நூலகம். கணினி ஆகியவற்றை ஏற்பாடு செய்ததோடுநில்லாமல் கைதிகளுக்கு கணினி சம்பந்தமான பாடங்களையும் கற்று தந்துள்ளார்.

2011 ஜூலையில் மேல்முறையீடும் 2014 டிசம்பர் 30 அன்று சுகுமாரனின் பொதுமன்னிப்புக்கான விண்ணப்பமும் தள்ளுபடி செய்யப்பட்டதும் நுசகம்பான்கன் தீவில் உள்ள சிறைச்சாலைக்கு 2015 சனவரியில் இடம் மாற்றப்பட்டார்கள்.

"நான் கைதுசெய்யப்படும் வரை, யாருக்கும் நான் எந்த ஒரு சிறு உதவியும் செய்தது இல்லை. மிக மிக சுயநலமாக என்னைப் பற்றி மட்டுமே யோசிக்கக்கூடிய ஒரு மனிதனாக இருந்தேன். வாழ்க்கையின் தேவைகள் என்ன, நோக்கங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளாமல் ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டேன்.
ஆனால், இந்தச் சிறை வாழ்க்கை, எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்து விட்டது. இப்போது நான் மனிதர்களைப் பற்றி நிறையவே யோசிக்கிறேன். அவர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ, அதை மட்டும் செய்கிறேன்.
இப்போது நான் வாழ ஆசைப்படுகிறேன். ஏனென்றால், நான் கைதுசெய்யப்பட்டதில் இருந்து இந்த நிமிடம் வரையிலான என் வாழ்வை நான் அர்த்தம் உள்ளதாக மாற்றியிருக்கிறேன்.
எனக்குத் தெரியாத பல விஷயங்களை வாழ்க்கை இப்போது கற்றுக் கொடுத்திருக்கிறது. அவுஸ்திரேலியா மக்களிடமும் இந்தோனேஷியா மக்களிடமும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் அனைவரிடமும் நான் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன் " என்பதே மயூரன் நுசகம்பான்கன் தீவில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றும்முன் கடைசியாக உலகத்துக்குச் சொன்ன செய்தி.

நுசகம்பான்கன் சிறைக்கு மாற்றிய 72 மணி நேரத்தில் தண்டனை நிறைவேற்றிவிடுவது வழக்கம். ஆனால் இன்னும் நிறைவேற்றாதது எந்த சமயத்திலும் தள்ளுபடி ஆகலாம் என்ற நிலையானாலும் தள்ளுபடி என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள் ஆறு பேரின் கையெழுத்து இட்டு அனுப்பிய பிறகும் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது நாம் கவனிக்க வேண்டியது.

"எங்கள் இறையாண்மையை மீறி செயல்பட முடியாது " இது இந்தோனிஷிய அதிபர் கூற்று.

"'எனக்கு அவன் ஒரு நல்ல சகோதரனாக இருந்தான். அவனை நோக்கி வீசப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வியாகவே இருந்தது.

இன்று ஆஸ்திரேலியா அரசு எவ்வளவோ முயன்றும், என் அண்ணன் இன்னும் மரணத்தின் பிடியில் இருந்து விலகவில்லை. அவன் எங்கேயாவது ஓர் இடத்தில் உயிரோடு இருந்தால் கூடப் போதும். ஆனால், அது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.

மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாட்டில் (ஆஸ்திரேலியா) இருந்து மரண தண்டனை விதிக்கப்படும் அந்நிய நாட்டின் சட்டப் பிடியில் இருந்து என் சகோதரனை மீட்கும் வழி தெரியாமல் தவிக்கிறோம். அவனைச் சுட்டுக் கொல்லும் நாளில் மரணிக்கப் போவது மயூரன் மட்டும் அல்ல... நான், அப்பா அம்மா , தம்பி என எங்கள் அனைவரின் மனசாட்சியும்தான்.
அன்று நாங்கள் அனைவருமே துயரமான ஒரு வாழ்க்கையினுள் விழப் போகிறோம். இப்போதே நாங்கள் தனித்து வாழ்கிறோம். எங்கள் வீட்டில் நல்ல சாப்பாடு சாப்பிட்டே பல நாட்கள் ஆகின்றன.
அந்தக் கறுப்பு நாளுக்குப் பிறகு எங்கள் நிலை என்னவாக இருக்கும் எனக் கற்பனைகூட செய்ய முடியவில்லை" என்று கதறும் அவரின் சகோதரிக்கு யாரால்தான் ஆறுதல் சொல்ல முடியும்?

யார் என்ன சொன்னாலும் தன் பிள்ளையை மீட்டுத்தாருங்கள் என கதற அங்கேயும் ஒரு அற்புதம்மாள் இருக்கதான் செய்கிறாள்.

"அவன் கைது செய்யப்பட்ட தினத்தில் இருந்து இன்று வரை எங்கள் குடும்பத்தில் யாராலும் அதை நம்ப முடியவில்லை. இப்போது அவனுக்கு இறுதித் தண்டனை வந்த பிறகு, அவனது வளர்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா எனச் சிலர் கேட்கிறார்கள்.

ஒரு தாய் தன் மகனை எப்படியெல்லாம் அன்பாக வளர்ப்பாளோ, அப்படித்தான் நான் அவனை வளர்த்தேன். அவனை மட்டும் அல்ல மூன்று குழந்தைகளையுமே. இடையில் அவன் திசைமாறிப் போயிருக்கலாம். நண்பர்கள் தவறாக வழிகாட்டியிருக்கலாம். ஆனால், இப்போது அது பற்றி பேசுவதோ, ஆராய்வதோ பலரையும் காயப்படுத்தும்.

நான் அவுஸ்திரேலிய மக்களிடமும் அரசிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். அவனை மன்னித்து, கருணை காட்டும்படி கேட்கிறேன். ஒரு தாயாக நான் இதை மட்டுமே செய்ய முடியும். எனக்கு என் மகன் வேண்டும்!

நாங்கள் அவனை விடுவிக்க இந்தோனேஷியா நீதிமன்றத்தில் போராடினோம். அவுஸ்திரேலியா வழக்குரைஞர்களின் உதவியோடு இந்தோனேஷியா வழக்குரைஞர்கள் இயன்றவரை வாதாடிப் பார்த்தனர். எந்தப் பலனும் இல்லை
நான் தேவாலயம் போய் என் மகனுக்காகப் பிரார்த்திக்கிறேன். சிறைக்குப் போய் அவனைச் சந்திக்கிறேன். இதுதான் என் வாழ்க்கை என்றாகிவிட்டது. அவனை முதலில் வைத்திருந்த பாலி சிறை பற்றி வாசித்த போது, அது மிக மோசமான கெட்ட கனவாக இருந்தது. அவனை நேரில் பார்த்தபோது, என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை.
குமுறிக் குமுறி அழுதேன், அவன் என்னைத் தேற்றினான். அதன் பின்னரும் நான் சில முறை அவனைச் சந்தித்தேன். ஆனால் ஒருபோதும் அவனிடம், 'நீ இதைச் செய்தாயா? எனக் கேட்டது இல்லை, கேட்கவும் விரும்பவில்லை.
இந்த உலகம் அவனைக் குற்றவாளி என்கிறது. அவன் செய்தது பயங்கரமான குற்றம் என்கிறது. ஆனால், அவன் என் மகன்... அவ்வளவுதான். நான் போனால், என்னிடம் தன் அவுஸ்திரேலிய நண்பர்கள் பற்றி விசாரிக்கிறான்
தன்னைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு வீடு பற்றி, தெரு பற்றி, தேவாலயம் பற்றி தகவல் கேட்கிறான். தங்கையிடமும் தம்பியிடமும் படிப்பு பற்றி பேசுகிறான். யோகா செய்யுமாறு சொல்கிறான்.
நாங்கள் ஏன் அவனுக்காக இவ்வளவு போராடுகிறோம் என்றால், தன் வாழ்வில் இழைத்த ஒரு தவறுக்குப் பிராயச்சித்தமாக, சிறையில் மயூரன் சிறந்த மனிதனாக கடந்த 10 ஆண்டுகளாக வாழ்கிறான். தன்னால் முடிந்த உதவிகள் அனைத்தையும் பிறருக்குச் செய்கிறான்.இதனால்தான் இன்னொரு முறை அவனுக்கு வாழும் வாய்ப்பை வழங்கக் கேட்கிறேன்" இவ்வாறு
.மண்டியிடும் தாயின் கண்ணீருக்காவது ரத்தாகுமா தண்டனை. பிள்ளைக்கு மரணம் என்றால் எந்த தாய்தான் தாங்குவாள்?.

ஏறக்குறைய அந்த நாள் நெருங்கி விட்டது.

ஆம் இன்னும் 72 மணி நேரத்தில் தண்டனை என சனிக்கிழமை (25/4/2015) அறிவிப்பு வெளியிடப்பட்டபடி இன்று நள்ளிரவு மரணதண்டனை நிறைவேற்ற காத்திருக்கின்றனர்.

ஆண்டர் சான் தனது காதலியை நேற்று சிறையில் மணந்து நண்பன் மயூரனுடன் மரணத்தை பகிர காத்திருக்கின்றார்.
கடைசியாக ஒரு ஓவியம் வரைய ஆசைப்பட்ட மயூரனின் ஆசையை நிறைவேற்றிய இந்தோனிஷிய போலிசுக்கு தெரியாது அதில் அவ்வளவு உணர்வுகள் தெளிக்கப்பட்டிருக்கும் என்று .

துப்பாக்கியும் தயார்
கைதிக்கு ஆடையும் தயார்
29.4.15 தேதியிட்ட சவப்பெட்டியும் தயார்
மன்னிப்பு மட்டும் காத்திருப்பில். 

(சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது )
-மதன் ஹிமாத்ரி